Thursday, July 14, 2011

சிறிதெனும் பெரிது ..



1.வலி என்ற
வார்த்தையைப் போல
அவ்வளவு
சின்னதாய் இல்லை
வலி.


2.பளபளக்கும் பெரிய காரில்
மின்மினுக்கும் நகைகளுடன்
ஒப்பனை மூடிய முகத்துடன்
வந்த பெண்மணி
கூண்டிலிருந்த பறவையை
வாங்கிப் போனாள்

பெரிய கூண்டில் வசிப்பது
சிறிய கூண்டில் வசிப்பதை
வாங்குகிறது
என்றெழுத வேண்டும் இதை...


3.வெற்றி பெற்றவனின்
தத்துவத்துக்கும்
தோல்வியுற்றவனின்
தத்துவத்துக்கும்
ஒரு வித்தியாசம் இருக்கிறது

தோல்வியுற்றவன்
தன் தத்துவத்தை
வாழ்ந்து தீர்க்கவேண்டி இருக்கிறது


4.அருமனை சர்ச்சைக் கடக்கையில்
அருட் தந்தை
'பிதாவே மன்னியும்
இவர்கள்
தங்கள் செய்வது இன்னதென்று
அறியாது செய்கிறார்கள் '
என்று ஒலிபெருக்கியில்
கெஞ்சிக் கொண்டிருந்தார்
இணையத்தில் இலக்கியம்
செய்பவர்களைப் பற்றிச்
சொல்கிறாரோ என்று
ஒரு கணம் திடுக்கிட்டேன்

5.உள்நாட்டிலோ
வெளிதேசத்திலோ
ஊர் நடுவிலோ
புதர் மண்டிய
ஒதுக்குப் புறத்திலோ
மண் மீதோ
கடல் நீரிலோ
கிடக்கிறது
எனக்கான ஆறடி ...

இன்றிரவு
என் வீட்டுக் கட்டிலில்
கிடைத்தது


நன்றி:- http://ezhuththuppizhai.blogspot.com/

No comments:

Post a Comment